திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.3 திருவலிதாயம் (பாடி)
பண் - நட்டபாடை
பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல் தூவி
ஒத்தசொல்லிஉல கத்தவர்தாம்தொழு தேத்தஉயர் சென்னி
மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலி தாயஞ்
சித்தம்வைத்தஅடி யாரவர்மேல்அடை யாமற்றிடர் நோயே.
1
படையிலங்குகரம் எட்டுடையான்படி றாகக்கன லேந்திக்
கடையிலங்குமனை யில்பலிகொண்டுடணுங் கள்வன்னுறை கோயில்
மடையிலங்குபொழி லின்நிழல்வாய்மது வீசும்வலி தாயம்
அடையநின்றஅடி யார்க்கடையாவினை அல்லல்துயர் தானே.
2
ஐயனொய்யன்னணி யன்பிணியில்லவ ரென்றுந்தொழு தேத்தச்
செய்யன்வெய்யபடை யேந்தவல்லான்திரு மாதோடுறை கோயில்
வையம்வந்துபணி யப்பிணிதீர்த்துயர் கின்றவலி தாயம்
உய்யும்வண்ணந்நினை மின்நினைந்தால்வினை தீருந்நல மாமே.
3
ஒற்றையேறதுடை யான்நடமாடியோர் பூதப்படை சூழப்
புற்றின்நாகம்அரை யார்த்துழல்கின்றஎம் பெம்மான்மட வாளோ
டுற்றகோயிலுல கத்தொளிமல்கிட உள்கும்வலி தாயம்
பற்றிவாழும்மது வேசரணாவது பாடும்மடி யார்க்கே.
4
புந்தியொன்றிநினை வார்வினையாயின தீரப்பொரு ளாய
அந்தியன்னதொரு பேரொளியானமர் கோயில்அய லெங்கும்
மந்திவந்துகடு வன்னொடுகூடி வணங்கும்வலி தாயஞ்
சிந்தியாதஅவர் தம்மடும்வெந்துயர் தீர்தலெளி தன்றே.
5
ஊனியன்றதலை யிற்பலிகொண்டுல கத்துள்ளவ ரேத்தக்
கானியன்றகரி யின்உரிபோர்த்துழல் கள்வன்சடை தன்மேல்
வானியன்றபிறை வைத்தஎம்மாதி மகிழும்வலி தாயம்
தேனியன்றநறு மாமலர்கொண்டுநின் றேத்தத்தெளி வாமே.
6
கண்ணிறைந்தவிழி யின்னழலால்வரு காமனுயிர் வீட்டிப்
பெண்ணிறைந்தஒரு பால்மகிழ்வெய்திய பெம்மானுறை கோயில்
மண்ணிறைந்தபுகழ் கொண்டடியார்கள் வணங்கும்வலி தாயத்
துண்ணிறைந்தபெரு மான்கழலேத்தநம் உண்மைக்கதி யாமே.
7
கடலின்நஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநட மாடி
அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மானமர் கோயில்
மடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலி தாயம்
உடலிலங்குமுயிர் உள்ளளவுந்தொழ உள்ளத்துயர் போமே.
8
பெரியமேருவரை யேசிலையாமலை வுற்றாரெயில் மூன்றும்
எரியவெய்தவொரு வன்னிருவர்க்கறி வொண்ணாவடி வாகும்
எரியதாகியுற வோங்கியவன்வலி தாயந்தொழு தேத்த
உரியராகவுடை யார்பெரியாரென உள்கும்முல கோரே.
9
ஆசியாரமொழி யாரமண்சாக்கிய ரல்லாதவர் கூடி
ஏசியீரமில ராய்மொழிசெய்தவர் சொல்லைப்பொரு ளென்னேல்
வாசிதீரவடி யார்க்கருள்செய்து வளர்ந்தான்வலி தாயம்
பேசுமார்வமுடை யாரடியாரெனப் பேணும்பெரி யோரே.
10
வண்டுவைகும்மணம் மல்கியசோலை வளரும்வலி தாயத்
தண்டவாணனடி யுள்குதலாலருள் மாலைத்தமி ழாகக்
கண்டல்வைகுகடல் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ் பத்துங்
கொண்டுவைகியிசை பாடவல்லார்குளிர் வானத்துயர் வாரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com